Wednesday 30 May 2012

குங்குமம் தோழியில் நமது நேசம் பற்றிய செய்தி


குங்குமம் தோழி இதழில் வெளிவந்த நம் நேசம் பற்றிய செய்தி..

நன்றி :குங்குமம் தோழி







Monday 2 April 2012

வெறும் வார்த்தைகளில் முடிவதில்லை - நன்றி


நன்றி - இந்த ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கமுடியுமா? இருந்தாலும் முடிந்தவரை என் நன்றியை தெரிவிக்கமுயல்கிறேன்.

நன்றி நண்பர்களே 

இணையத்தில் அறிமுகமாகி இதுவரை நேரில் கூட பார்த்திராத நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழுமம் என்ன செய்யலாம் - இதுதான் பெயரே. இதுவரை ஒரு பெயர் கூட வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. எங்கள் நோக்கம் எங்கள் அளவில் நிறைவேறுகிறது. அது போதும். எந்த தேவையற்ற பேச்சும் இந்த குழுமத்தில் இருக்காது. தினேஷ், கே.விஆர், ஜோசப், அகிலா, மதார், அப்துல்லா, வெயிலான், வித்யா, பபாஷா இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த குழுமத்தில் இருந்து வந்ததுதான் நேசம். இந்த நண்பர்களின் முழு ஆதரவோடு கோவையிலிருந்து இயக்கப்படுகிறது. முழுக்க முழுக்க புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்று ஆரம்பித்தது, ஆனால் எந்த வியாதிகளூக்கு அல்லது மருத்துவ ரீதியாக எதற்கு விழிப்புணர்வு தேவையோ அதை இனி செய்வோம்.

தேங்க்ஸ் மக்களே உங்க இந்த சப்போர்ட் இல்லனா இது சாத்தியம் இல்லை.

நன்றி நடுவர்களே 

விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி நடத்துவதாக அறிவித்தாகிவிட்டது. நடுவர்கள் என்று யோசிக்கும் போதே தோன்றியவர்கள் ஸ்ரீதர் நாராயணன், பாலபாரதி மற்றும் வெயிலான் ரமேஷ். இவர்கள் கட்டாயம் மிகச்சிறப்பாக மிக நடுநிலையான விமர்சனம் தருவார்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.  கடுமையான பணி சூழலிலும் மூவரும் ஒவ்வொரு கதையைபற்றியும் விவாதித்து மதிப்பெண்கள் அளித்து, தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளூக்கும் அவர்களின் கருத்துகளை தெரிவித்து... அவர்களின் சிரத்தையும் மெனக்கெடலுமே இந்த போட்டியை நல்ல முறையில் நடத்திக்கொடுத்தது.


கட்டுரை போட்டியின் நடுவர்களான டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.  இவர்களின் மிகக்கடுமையான பணிகளுக்கும் பயணங்களுக்கும் நடுவில் கட்டுரைகளின் தரங்களை மதிப்பிட்டு, அதன் உண்மைத்தன்மையை விளக்கி மிகசிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்தனர்.

நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீதர், பாலபாரதி, வெயிலான், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.

நன்றி சேர்தளம்

திருப்பூரில் இந்த பரிசளிப்பை நடத்தலாம் என்று முடிவுசெய்தவுடன் சேர்தளம் நண்பர்கள் விழாவில் கலந்து கொள்ள மட்டும் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இடம் ஏற்பாடு செய்து லைட்டின், மைக், ஜென்ரேட்டர், விருந்தினர்கள் என்று பார்த்து பார்த்து செய்த திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், முரளி, செந்தில்,செல்வம், பரிசல், ராமன், இன்னும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நேற்றைய விழா :



மாலை 5.30க்கு ஆரம்பித்த விழா முதலில் செல்வம் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து முரளியின் வரவேறுபு உரை.
புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றிய டாக்டர். கலைச்செல்விஅவர்கள் (குமரன் மருத்துவமனை - திருப்பூர்)  புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், முன்கூட்டியே கண்டறிந்தால் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த கூடியது என்றும், ஒரு முறை சிகிச்சை எடுத்து குணமானவர்கள் மறுபடியும் குறைந்தது 5 வருடங்கள் மீண்டும் தொடர் சிகிச்சையில் இருக்க

வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பரிசும், சான்றிதழும்  விழா விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.

கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. மோகனா அவர்கள் - பழனியாண்டவர் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியை, 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் துறையில் இருப்பவர். இவர் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர். இவரது உரையில் ஆண்களுக்கான மார்பு புற்றுநோய் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.


 


விழாவுக்கு தலைமை ஏற்ற திரு,.பி.ஆர்.கணேசன் அவர்களின் உரை அனைவரையும் மிக கனத்த மனநிலைக்கு கொண்டு சென்றது. புற்றுநோயால் அவர் தந்தை, சிறிய தந்தையர்கள் இருவர் மற்றும் அவரின் 21 வயது மகளை இழந்தது. புற்றுநோயின் வேதனை, போராட்டம் பற்றி அவரின் அனுபவங்கள் வந்திருந்த அனைவரையும் மனம் பதற செய்தது. புற்றுநோயின் விழிப்புணர்வின் அவசியத்தை மிக நெகிழ்வாக விளக்கினார்

.



இதனை தொடர்ந்து 15,வேலம்பாளையம் திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவர்களின் தப்பாட்டம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மற்றுமன்றி அந்தபகுதியில் உள்ளவர்களையும் விழா அரங்கிற்கு இழுத்துவந்த நிகழ்வு. தப்பாட்டம் மற்றும் புதுக்கோட்டையின் பாரம்பரிய நடனமான சில்லாட்டம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.


 

பதிவர் பரிசல் கிருஷ்ணாவின் நன்றியுரையுடன் நேசம் பரிசளிப்பு விழா சேர்தளம் சொந்தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்புடன் முடிவடைந்தது. சேர்தளம், டாக்டர் கலைச்செல்வி, திரு.கணேசன், நிகழ்காலத்தில் சிவா, மற்றும் இவ்விழாவில் செயல்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 




இந்த போட்டியின் பரிசுத்தொகை கதை போட்டியின் முதல் மூன்று பரிசுகளை தந்த யுடான்ஸ் ஜோசப், கட்டுரை போட்டியின் முதல் பரிசை ஏற்ற பதிவர் ஓ.ஆர்.பி.ராஜா, மற்றும் அனைத்து ஆறுதல் பரிசுகளையும் தன் பங்காக தந்துதவிய பதிவர் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

நேசம் முதல் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பில்லாத போது நம்பிக்கை அளித்த ஸ்வாமிஓம்கார். பேரே சொல்லக்கூடாது என்னும் நிபந்தனையுடன் நேசம் இலச்சினை வடிவமைத்த கோபி, ஆதவன், நேற்றைய விழாவில் பேருதவி செய்த முரளியின் மைத்துனரும், செந்திலின் உறவினர் சகோதரனும், இந்த விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கோபி, குறும்படம் இயக்கிய அனந்து, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும். பரிசு பெற்றவர்களுக்கும் நேசம் சார்பில் வாழ்த்தும் நன்றிகளும்.

ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் வெகு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது உங்கள் அனைவரின் ஆதரவே காரணம். மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இது போன்றே வரப்போகும் நாட்களிலும் எங்களால் இயன்ற பணிகளை செய்வோம், உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.

நன்றி!!!







Thursday 29 March 2012

நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிகள் பரிசளிப்பு விழா



நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா 








அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்




Wednesday 28 March 2012

நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி முடிவுகள்


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளில் பகிரவேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளன. போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளில் விதிமுறைகளுக்கு உடபட்டு டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த கட்டுரைகள் பரிசு பெறுகின்றன.





ஆறுதல் பரிசு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தக கூப்பன்

பதிவர் திருமதி ஜலீலாகமால் வின்  புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும் இந்த கட்டுரை சற்றே பெரிது எனினும் பெண்களுக்கு வரும் புற்றுநோயின் தீவிரம் குறித்து அலசப்படுவதால் ஆறுதல் பரிசை பெறுகின்றது.


பதிவர் திரு. இன்னம்பூரான் எஸ்.சௌந்திரராஜனின் பசுமரத்தாணி - இந்த கட்டுரை ஆறுதல் பரிசை கட்டுரையின் தகவல் செறிவு பிழையின்மை ஆகியனவற்றிக்காக பெறுகிறது

மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் ஆறுதல் பரிசை பெறுகின்றன. வாழ்த்துகள்



மூன்றாம் பரிசு - 2000 ரூபாய் 

பதிவர் திரு. ரத்னவேல்- கட்டுரை - ஆண்களுக்கான மார்பு புற்றுநோய்

ரத்னவேல் அவர்களின் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை மூன்றாம் பரிசை பெறுகிறது. கட்டுரையின் செறிவும் தகவலும் நன்று. எனினும் இது அவர் சொந்த படைப்பு அல்ல என்பது மூன்றாம் பரிசுக்குகாரணம். எழுதிய டாக்டர் கே.முருகானந்தம் அவர்களுக்கு நன்றி

இரண்டாம் பரிசு -3000 ரூபாய்

பதிவர் திரு கதிரவன் -கட்டுரை - புற்றுநோய் ஒரு பார்வை 

கதிரவனின் கட்டுரை தேவையான அனைத்து தகவல்களையும் விழிப்புணர்வையும் ஒருங்கே கொண்டு இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறது.

முதல் பரிசு - ரூபாய் 5000.


பதிவர் திருமதி ஹுசைனம்மாவின் கட்டுரை மிக எளிதாக தேவையான விழிப்புணர்வுடன், படங்களுடன் அதன் சுட்டிகளுடன் இருப்பதால் அவரின் இரண்டு கட்டுரைகளும் முதல் இடத்தை பகிர்கின்றது.

கட்டுரை 1வருமுன் காப்போம் 
கட்டுரை 2 - நம்மை நாமல்லாது வேறாராறிவார்?




போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். உங்களில் நேரில் வந்து விழாவில் கலந்து கொண்டு பரிசை பெற இயலுபவர்கள் தயவுசெய்து நேரில் வந்து கலந்து கொள்ளூங்கள். இயலாதவர்கள் தங்கள் பரிசை அனுப்பவேண்டிய முகவரியை தெரிவிக்கவும்.



நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் குறும்பட போட்டிகள் குறித்து


நேசம் அமைப்பினர் எதிர்பார்த்த அளவிற்கு விழிப்புணர்வு குறும்படங்கள் வராததால் இந்த போட்டி பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும். தற்சமயம் வந்திருந்த குறும்படங்களில் சிறப்பானதாக கருதப்படும் அனந்துவின் குறும்படமும், கோவை விக்னேஷின் குறும்படமும் நேசம் பரிசளிப்பு விழாவில் திரையிடப்படும். இவை இரண்டுமே பின்னர் அறிவிக்கப்படும் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.




நன்றி


Monday 26 March 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி முடிவுகள்


நேசம் கதை கட்டுரை குறும்பட போட்டிகள் அறிவித்து சரியாக மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் எந்த வித வரவேற்பும் இல்லாமல் இருந்தது. பதிவர்களுக்கு என்று இருந்ததை பொதுவாக என்று மாற்றும் எண்ணம் கூட தோன்றியது.  முடிவு தேதி நெருங்க கதைகள் வந்த வண்ணம் இருந்தது. வந்திருந்த மொத்த கதைகளில் சுமார் 25 கதைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் குழுவினரின் இறுதி பட்டியலில் வந்தது. அதிலிருந்து சிறந்த முதல் மூன்று கதைகளூம் ஆறுதல் பரிசாக நான்கு கதைகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இறுதி சுற்றில் தேர்வான கதைகள் நேசம் வலைப்பூவில் வெளியிடப்பட்டு சான்றிதழ் அனுப்பப்படும். ஒரு நல்ல காரியத்திற்காக தோள்கொடுத்த அனைவருக்கும் நன்றி.


நான்கு ஆறுதல் பரிசுகளாக


1. பதிவர் ஆசியா உமர் -  கதை  - வலி 

நடுவர்கள் கருத்து : 


ஓரளவுக்கு வட்டார வழக்கு இயல்பான கதை ஓட்டம் கொடுக்கிறது.  ஏதோ இரண்டொரு நாட்களில் வாய் புற்றுநோய் பெருமளவு பரவிவிடுவது போல் காண்பிப்பது சற்று இடறுகிறது.  பெத்தாவை மொத்தமாக கைவிட்டுவிடாமல் காப்பாற்றி இருக்கலாம்.  இயல்பான வசனங்கள் பெரும் பலம்.  எதுவும் புதியதாக நிகழாமல் எதிர்பார்த்தபடியே முடிந்து போவது கதையின் பலவீனம்.

2. பதிவர் தினேஷ் ராம் -   கதை   - ஜொள்ளன் 

நடுவர்கள் கருத்து : 



சிறு குழந்தையின் வரவால் நோயாளி நமசிவாயம் குணம் பெறுவதை அழகாக சொல்லியிருக்கிறார்.  கதையின் விவரணைகள் அருமை.  கதையில் சில பாத்திரங்களுக்கு (நமசிவாயம், பங்காளி ஆறுமுகம், கதிரேசன்) பெயர் இருக்கிறது.  சில பாத்திரங்களுக்கு பெயரில்லை (நமசிவாயத்தின் மகன், மனைவி போன்றோர்).  கதையின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.  நல்ல முயற்சி.


3. பதிவர் விச்சு - கதை உதிர்ந்த சிறகுகள் 


நடுவர்கள் கருத்து :


’நாந்தானே அண்ணியைக் கொன்னுட்டேன். இந்தப்பாவியை மன்னிச்சிரு’ என்று சங்கையாவின் தங்கை கதறுவதோடு கதை ஆரம்பித்திருந்தால இன்னும் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கும். முதலில் வரும் இழவு வீட்டு வர்ணனை அழுத்தமாக இல்லாமல் இழுவையாக தோன்றினாலும், நல்ல கதைக் களன்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவோம் என்று சங்கையா நினைத்துக் கொள்வது பொருத்தமான முடிவு. கதை என்னமோ முழுமையாக வெளிப்படாதது போல ஒரு உணர்வு.


4. 
பதிவர் தேவராஜ் விட்டலன் -   கதை   - முகங்கள்


கர்ப்ப புற்றுநோய் பற்றி நிறைய தகவல்களும், சிகிச்சை முறைகளும் சாதகமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.  கதை நடக்கும் சூழலைப் பற்றிய வர்ணனைகள் நன்றாக இருக்கின்றன.  இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.


மூன்றாவது இடம் - பதிவர் கார்த்திக் பாலா- கதை - அப்பா


நடுவர்கள் கருத்து : 


தலைப்புக்கு பொருத்தமான கல்யாண்ஜியின் கவிதையோடு துவங்குகிறது.  ஆனால் இது கதையா, அல்லது கட்டுரையா என்று ஒரு சந்தேகம் நிழலாடுகிறது. புற்றுநோய் என்றாலே ப்ளட் கேன்சர், லங்க் கேன்சர் என்று யோசிக்காமல் soft tissue sarcoma மாதிரியான நோய்களை யோசித்ததற்கு பாராட்டுகள்.  நோய் முற்றுமுன்னரே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை சரியாக செருகியிருக்கிறார் கதாசிரியர். கதை முடியும்போது ஒரு நிமிடம் நாமும் கதைசொல்லியின் அப்பாவிற்காக பிரார்த்திக்கிறோம்.  ஆனால் கதை மட்டும் முடிவடையாத உணர்வு எஞ்சி நிற்கிறது.



இரண்டாவது இடம் - பதிவர் ஸ்டார்ஜன் - கதை - பொழுதுவிடியட்டும்

நடுவர்கள் கருத்து :



தன்மையில் கதை சொல்லும்பாணியில் ஒரு 'திடுக்' முடிவு கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.  கிராமிய வழக்கினை நன்றாகவே பயன்படுதியிருக்கிறார்.  அந்த பிச்சை பாத்திரம் ஏதோ பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  இறுதியில் செல்விக்கு நிரந்தர தீர்வு எதுவும் ஏற்படாமல் போனதுதான் சோகம். இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக இருந்திருந்தால் நல்ல கதையாக பரிமளித்திருக்கும்.


முதலிடம் - பதிவர் அப்பாவி தங்கமணி - கதை - ஆசிர்வாதம்  

நடுவர்கள் கருத்து :


சிறுகதைக்கான எல்லா அம்சஙக்ளும் நிறைந்திருக்கிறது. இயல்பான உரையாடல், கனமான செண்டிமெண்ட், பாந்தமான தலைப்பு, அளவான டெக்னிகல் சமாச்சாரஙக்ள் என்று நிறைவான கலவை. வலிய திணிக்கபப்ட்ட சோகமாக இல்லாமல் பொருத்தமாக இருந்தது முடிவு.  வாழ்த்துகள்.


பரிசுகள் ஏற்கனவே அறிவித்திருந்த படி முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000, இரண்டாம் பரிசு ரூபாய் 2000. ஆறுதல் பரிசுகளாக நான்கு சிறுகதைகள் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தக கூப்பன்கள் பெறுகிறது.


இந்த பரிசுகள் திருப்பூர் பதிவர்களின் அமைப்பான சேர்தளம் ஒருங்கிணைப்பில் வரும் ஏப்ரல் ஒன்று அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. பரிசு பெற்றவர்களின் நேரில் வர இயலும் நண்பர்கள் தயவுசெய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும். நிகழ்வுகள் குறித்த பதிவு நாளை வெளியிடப்படும்.

பரிசு பெற்ற அனைவருக்கும் நேசம் சார்பில் வாழ்த்துகளும் நன்றிகளும். 

Monday 27 February 2012

பசுமரத்தாணி - நேசம் -யுடான்ஸ் கட்டுரை போட்டி



‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி போல்  நினைவில்நிலைத்து நிற்கிறது. தெளிவான கருத்து. மரபு அணுவிலிருந்து சுற்றுப்புற சூழல் வரை, பல காரணிகளால், நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வைத்தியரிடம் போவதற்கு முன்னால், நோய் நம்மை அண்டவிடாமல் தடுத்தாட்கொள்வது சாலவும் நன்று. அத்தகைய ‘வருமுன் காப்போன்’ செயல்பாடுகளுக்கு, விழிப்புணர்வு பெரிதும் உதவும். இந்த சிறிய கட்டுரை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், சிகிச்சை, தொடர் சிகிச்சை, வாழ்வியல் உத்திகள், அனுபவம் மற்றும் சமுதாய கோட்பாடு ஆகியவைபற்றி மட்டும் ஒரு அறிமுகம் தருகிறது.
விழிப்புணர்வு:
தொட்டதெல்லாம் ஒட்டிக்கொள்வதில்லை. புற்றுநோய் தொத்துவியாதி அல்ல. அதற்கு நிவாரணமே இல்லை என்று நிலவும் கருத்தும் தவறு. எதிர்பாராத வகையில், அதனுடைய தாக்கம் ஏற்படலாம் என்பதையும் மறுக்க இயலாது. இந்த கட்டுரையின் அடித்தளம்: அனுபவம், தன்னார்வப்பணி, ஆய்வு தளங்கள்.
சில புற்றுநோய் எச்சரிக்கைகள் யாவருக்கும் புரியும்; பெரிதும் உதவும். அவரவர்கள் கவனித்துக்கொள்ள இயலும். அவற்றை பற்றிய விழிப்புணர்வு இன்றியமையாதது. அவையாவன:
  1. ஓயாத இருமல்/ கம்மிய குரல்;
  2. நீண்டகாலமாக ஆறாத புண்கள்;
  3. உடலில் இனம் புரியாத வீக்கம்/தடிப்பு/கட்டி
  4. புது மச்சம்/ இருக்கும் மச்சத்தில் மாற்றங்கள்;
  5. நெடுநாள் அஜீரணம்/ விழுங்குவதில் இன்னல்;
  6. மலம்/சிறுநீர் கழிப்பதில் புதிய இன்னல்கள்;
  7. உடல் எடையில் திடீர் மாற்றம்;
  8. அதிகப்படி உதிரப்போக்கு/கசிவு;
  9. வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத வலி.
மருத்துவரை அணுக, இந்த எச்சரிக்கைகள் உதவும். குறிப்பு வைத்துக்கொள்வது நலம். மேலும், சில தகவல்கள் நம் யாவருக்கும் தெரிய வேண்டும். புற்றுநோய் என்பது ஒரே ஒரு வியாதி அல்ல. அதற்கு, வயது ஒரு பொருட்டல்ல. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு: உடலில் எந்த பாகத்திலும் ~ மூளையிலிருந்து உள்ளங்கால் வரை~பாதிப்பு ஏற்படலாம். காரணிகள் பல. சுருங்கச்சொல்லின், வாழ்நாள் முழுதும், நமது உடலில் கோடிக்கணக்கான கலங்கள் (cells) பிறந்தும், மறைந்த வண்ணமாக இருக்கின்றன. அதற்கு திறன் மிகுந்த இயற்கை கட்டுப்பாடு உண்டு. தவறி, அந்த செயல் தாறுமாறாக இயங்கி கலங்கள் விகாரமாக பிரிந்தால், புற்றுநோய் வரும் அபாயமும், விகாரம் விரைவில் தீவரமாவதும் கவலை தரும் விளைவுகள். மருத்துவரிடம் சென்று, தேவையான சோதனைகளை செய்து கொள்வது நலம். அதற்கு முன்னால், தடுப்பதை பற்றி ஒரு பார்வை.
தடுப்புமுறைகள்:
புற்றுநோய் மட்டுமல்ல, இருதயநோய், நுரையீரல் நோய், ரத்த அழுத்தம் போன்ற பற்பல நோய்களை தவிர்க்க, சில வாழ்வியல் நடைமுறைகள் என்றும் உதவும். அவை: புகையிலை விலக்குதல், உகந்த உடற்பயிற்சி, திட்டமிட்ட உணவு முறை. சமுதாயம் செய்யவேண்டிய ‘வருமுன் காப்போன்’, ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய் கண்டறிதல் சோதனை.  சமுதாய ‘புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறையும், கோட்பாடும், செயல்முறைகளும்’ இன்றியமையாதவை. கட்டுரை முடிவில் அவற்றை பற்றி பேசப்படும். 
சிகிச்சை:
பரிசோதனைகளுக்கு, புற்றுநோய் சிகிச்சையில் முக்கியத்துவம் அதிகம். இரத்த சோதனைகளுக்கு முதலிடம். கலங்களின் ஆரோக்கியத்தை அறியவும், புற்றுநோய் அறிகுறிகளை தனிமைப்படுத்தி, இனம் காணவும், இவை தேவை. மேலும், சதை, தசை, எலும்பு போன்றவற்றை பரிசோதிக்க வேண்டியிருக்கலாம். கதிர் (எக்ஸ்ரே), வருடி (சீ.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ, பி.ஈ.டி. ஸ்கேன்), குழாய் மூலம் சிறுகுடல் போன்ற உள்ளுறுப்புகளை படம் பிடித்து சோதிப்பது (எண்டோஸ்கோபி) என்று பல வகை சோதனைகள் உண்டு, அவை எல்லாவற்றையும் அடிக்கடி செய்ய நேரிடும் என்ற அளவுக்கு மட்டும், அறிமுகம் இங்கே. அவற்றால் விளையும் வலி, இன்னல், செலவு எல்லாம் தவிர்க்கமுடியாதவை. சிகிச்சையே, பரிசோதனைகளை பொறுத்து அமைகிறது. என் செய்வது?
பொதுவாக சிகிச்சையின் நான்கு பிரிவுகளை அறிமுகப்படுத்தலாம். 
  1. அறுவை சிகிச்சை: விகாரமான கலங்கள் மேலும் பரவாமல் இருக்க, அந்தந்த உறுப்புகள் களையப்படவேண்டும். 
  2. கதிர் இயக்க சிகிச்சை, அதி முக்யமாக கோபால்ட் இயக்க சிகிச்சை: க்யீரி அம்மையாருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவருடைய கண்டுபிடிப்பால், பிழைத்தவர்களின் எண்ணிக்கை, கணக்கில் அடங்கா. இந்த கதிர்களால் விகாரப்பட்டுப்போன கலங்களை, குறி வைத்து, சுட்டழித்து விடுகிறார்கள்.
  3. வேதி மருத்துவம்: பல வருடங்கள் சிகிச்சை அனுபவமும், இடை விடாத ஆய்வு முடிபுகளும் தான் வேதி மருத்துவத்திற்கு அடித்தளம். உதாரணமாக மார்பக புற்றுநோய் மருந்தாக மூன்று நச்சு மருந்துகளின் கலவை (melphalan, sodium metatroxide & 5FU) பயன்பட்டது. இம்மாதிரி பல கலவைகள் உண்டு. அவை யாவற்றிற்கும் தீவிரமான பக்கவிளைவுகள் உண்டு. மருத்துவர் அறிவுரையை அறவே கடைபிடிக்கவேண்டும் என்பது தான், முக்கிய அறிமுகம்.
இவை மூன்றும் கலந்தும், தனித்தும் அளிக்கப்படலாம். அடிக்கடி அவற்றின் முறை (protocol) மாற்றப்படலாம்.
  1. புற்றுநோய் திரும்பி வரக்கூடியது என்பதால், ஆண்/பெண்பாலாருக்கு இயல்பாகவே உள்ள ஹார்மோன் சுரப்பிகளின் திறனை சற்றே மாற்றியமைத்து, வருமுன் காப்போனாக இயங்கும் இந்த சிகிச்சை முறை, மருத்துவ ஆலோசனையை பொறுத்து, உதவும்.
தொடர் சிகிச்சை:
கலங்களின் விகாரம் தான் புற்றுநோயின் அடிப்படைக்காரணம் என்பதால், அந்த நோயை அறவே ஒழித்ததாக என்றுமே சொல்ல இயலாது. தொடர் சிகிச்சை ஒன்று தான் வழி. ஒரு காலகட்டத்திற்கு, வாழ்நாள் முழுதும், வருடம் ஒரு முறை தவறாமல் மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வது விவேகம்.
வாழ்வியல் உத்திகள்:
அச்சம் தவிர். கவலையற்க. பணிகளை தொடருக. மற்றவருடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, விழிப்புணர்வு அளிப்பது, நமக்கே டானிக் கொடுத்த மாதிரி. உடற்பயிற்சி, ஆகார நியமங்கள், அன்றாட வாழ்க்கையில் ஆர்வம், தியானம் ஆகியவை உதவும். புற்றுநோய் நண்பர்கள் என்று குழுக்கள் ஆக்கப்பூர்வமாக இயங்குகின்றன.
அனுபவம் பேசுவது: 
ஒரு மார்பக புற்று நோயாளி முற்றும் குணமடைந்தார். அறிகுறி ஐயம் ஏற்பட்டவுடனே சிகிச்சையும், முப்பது வருட தொடர் சிகிச்சையும் உதவியது. காலபோக்கில் பல முன்னேற்றங்கள். தற்செயலாக, தாடையில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டவர் ஒருவருக்கு, வேதி மருத்துவம் உடனுக்குடன் கை கொடுத்தது. ஒரு நோயாளி மிகவும் கவலைக்குட்படுத்தப்பட்டார், ஒரு பணத்தாசை பிடித்த மருத்துவரால். ஒரு பிரபல புற்றுநோய் தர்ம ஆஸ்பத்திரி, அவருக்கு புற்று நோய் இல்லை என்று நிரூபித்து விட்டது! மருத்துவரை தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது!
சமுதாய புற்றுநோய் சிகிச்சை அணுகுமுறையும், கோட்பாடும், செயல்முறைகளும்:
புற்றுநோய் உயிர் பறிக்கும் வலிமை உடையது. தனிமனிதர்களால் தாக்குப்பிடிப்பது கடினம். செலவு அபரிமிதம். எனவே, சமுதாயமும், அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதன் கொடுமையை தணிக்கவேண்டும். வள்ளல்களின் நன்கொடை பெரிதும் உதவும். காப்பீடு திட்டங்கள் அவசியம் வேண்டும். அரசு பெரிய அளவில் மேற்பார்வை செய்வதுடன், ஸ்க்ரீனிங்க் திட்டங்களை, தேவையை பொறுத்து, செயல் படுத்தவேண்டும். பெண்பாலாருக்கு மார்பக ஸ்க்ரீனிங்க் நன்மை தரும். அந்த அளவுக்கு, வயது முதிர்ந்த ஆண்களுக்கு சிறுநீர் தடை ஸ்க்ரீனிங்க் தேவை இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிட முடியும்..
சுட்டிகள், ஆதாரங்கள் விவரம்:
இந்த கட்டுரையின் ஆதாரம், சுய அனுபவமும். கீழே சுட்டியுள்ள இரு இணைய தளங்களும். அதற்கெல்லாம் மேலாக, 28 01 2012 அன்று, மாக்மில்லன் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மையத்தின் சுவரொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட தன்னார்வ படிப்பினைகள்.
உசாத்துணை:


குறிப்பு : இந்தக்கட்டுரை திரு.இன்னம்பூரான் (எஸ்.ஸெளந்தரராஜன்) அவர்களுடையது. அவருக்கு தனியாக வலைப்பூ இல்லாததால் இங்கு வெளியிடப்படுகிறது.

Monday 30 January 2012

ஒரு அறிவிப்பு

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை, கட்டுரை, குறும்பட போட்டிகள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் படைப்புகளை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 31க்கு பதிலாக  பிப்ரவரி 10க்கு மாற்றி அமைக்கப்படுகிறது. நண்பர்கள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


குறும்படம் அனுப்பும் நண்பர்கள் இரண்டு டிவிடிகளாக அனுப்பவும். முகவரி மெயிலில் பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி

Tuesday 10 January 2012

நேசம் + ப்ரணவ பீடம் இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை





 நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய் நாடி வாய்ப்பச் செயல்

இந்தக்குறளின் வழி உள்ளிருந்து கொல்லும் நோயான புற்றுநோயை வராமல் தவிர்க்க உள்ள வழிமுறைகளை கண்டறியும் பொருட்டு நம் மருத்துவத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் இதற்கு என்ன வழி என்றும் அறிதல் பொருட்டும் ஏற்படும் விழிப்புணர்வு முகாம் கோவையில் வரும் பிப்ரவரி 5 - ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.


நேசம் அமைப்பின் முதல் நிகழ்வாக கோவையின் பிரபல பதிவர், யோகா ஆசிரியர் சுவாமி ஓம்கார் அவர்களின் ப்ரணவ பீடம் ( http://pranavapeetam.org/)
 இணைந்து கோவையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு இலவச யோகா பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.. ஆர்வமுள்ள யாரும் கலந்து கொள்ளலாம். கீழ்கண்ட எண்ணில் அல்லது நேசம் ஈமெயில் முகவரியில்  உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி.  இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும். 

நிகழ்ச்சி நடக்கும் இடம் : 





ப்ரணவ பீடம், 
பொன்னுரங்கம் ரோடு, 
ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம் 

நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை


இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.



தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710

மின்னஞ்சல் முகவரி ; nesamgroup@gmail.com

Sunday 1 January 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு. 



கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.


2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.

3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


கட்டுரை :  சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.



பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும்.  யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.


2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ )  இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது. 

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.


4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும். 


5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.


7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும். 


8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.


சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம்.  வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள்  வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 




ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.